பாத்திமா செய்தி என்பது ஜெபம், தவம், ஜெபமாலை, மாதாவுக்கு அர்ப்பணம் என இருந்தாலும் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதும் கடவுளின் திட்டமுமாகவும் பாத்திமா செய்தியின் சாரமாகவும் இருப்பது மரியாயின் மாசற்ற இருதயமே.

இம்மாசற்ற இருதய பக்தி என்பது, “மாதாவை இரக்கத்தின் ஆசனமாகவும், நன்மைத்தனத்திற்கும் மன்னிப்பிற்கும் இருப்பிடமாகவும், நாம் மோட்சம் செல்வதற்கு நிச்சயமான வழியாகவும் ஏற்றுக்கொண்டிருப்பதே.” இதை சகோதரி லூஸியாவே கூறியுள்ளாள்.

மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தி

ஓ! மரியாயின் மாசற்ற இருதயப் பக்தியின் உயர்வையும் சிறப்பையும் அவசியத்தையும் யாரால் எடுத்துரைக்கக்கூடும்?  மரியாயின் மாசற்ற இருதயம் என்பதென்ன? சர்வேசுரனின் சிருஷ்டிக்கப்பட்ட அமலோற்பவம் அல்லவா? திரியேக கடவுளின் பிரதிபலிப்பாயிருக்கிற மாசற்ற மாதாவல்லவா?

பரமபிதா உலகத்தை எவ்வளவு நேசித்தாரென்றால் தம் ஏக சுதனையே அதற்குத் தந்தாரென்பது எப்படிப்பட்ட அன்பின் கொடை! (அரு. 3:16).  இங்கே பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனே தம் குமாரத்தியும் தாயும் பத்தினியுமான மாதாவை இக்கடைசி காலங்களில் மனுக்குலத்தின் கடைசிப் பிணையாக லூஸியா சொல்கிறபடி ஒருவித நடுக்கத்துடனே கடவுளின் இந்தப் பொக்கிஷத்தை, நாம் மறுத்துவிடுவோமோ என்ற பயத்தோடு தருகிறாரே! 

அப்படியென்றால் இத்தாயை நாம் எவ்வளவான அன்புடனும் ஆர்வத்துடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!  ஏற்பது மட்டுமல்ல, இப்புனித  மாதாவை பொக்கிஷமாய் நேசித்து அவர்களின் மாசற்ற இருதயத்தை நோகச் செய்யும் எதையும் செய்யாதிருப்பதோடு, பாவிகளால் அவர்களுக்கு ஏற்படும் நோவை நம் அன்புப் பரிகாரத்தால் நீக்க வேண்டும்!

மரியாயின் மாசற்ற இருதயப் பரிகாரப் பக்தியே இன்று திருச் சபையைக் காப்பாற்றும்.  சகல தப்பறைகளையும் அழிக்கும். ஆன்மாக்களை மனந்திருப்பி இரட்சிக்கும். ரஷ்யாவை மனந்திருப்பி உலக சமாதானத்தைக் கொண்டு வரும். மாதாவின் பிந்திய கால அப்போஸ்தலர்களே!  நீங்கள் இதை நன்றாக சிந்தித்து உணருங்கள்.

பரிகாரப் பக்தியை சேசுவும் மாதாவும் கேட்ட அபூர்வமான காட்சி

பாத்திமா சிறுவர்களுக்கு நரகத்தைக் காட்டிய பின் மாதா: பாவிகள் நரகத்தில் விழுவதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும் கேட்க வருவேன் என்று கூறியிருந்தபடியே அவற்றைக் கேட்க வந்தார்கள்.

டிசம்பர் மாதம் 10-ம் தேதி 1925-ம் ஆண்டு போந்தவேத்ரா என்னும் இடத்திலுள்ள அர்ச். டோரதியம்மாள் சபையில் லூஸியா நவகன்னியாயிருந்தாள். அன்று பால சேசுவும் மாதாவும் அவளுக்குத் தரிசனையானார்கள். 

சேசு 10 வயதுச் சிறுவனாக ஒரு சிறு ஒளி மேகத்தில் நின்றபடி காட்சி தந்தார்.  முழங்காலிட்டிருந்த லூஸியாவின் தோளில் தன் இடது கையைப் படிய வைத்தபடி மாதா தோன்றினார்கள். அவர்களின் வலது கையில் முட்கள் குத்தி நிறைந்திருந்த ஒரு இருதயம் இருந்தது. சேசு லூஸியாவைப் பார்த்து: “உன் மிகப் பரிசுத்த அன்னையின் மாசற்ற இருதயத்தின் மீது இரக்கப்படு. நன்றியற்ற மனிதர் ஒவ்வொரு கணமும்  அதைக் குத்தும் முட்களால் அது நிறைந்துள்ளது.  பரிகார முயற்சி செய்து அவற்றை எடுப்பதற்கு யாருமில்லை” என்றார்.

இதன்பின் மாதா லூஸியாவிடம்: “என் மகளே! நன்றியற்ற மனிதர்கள் தங்கள் தூஷணங்களாலும் நன்றிக் கேட்டினாலும் ஒவ்வொரு கணமும் குத்துகிற முட்களால் சூழப்பட்டிருக்கிற என் இருதயத்தைப் பார்!  நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு.  இதை நீ அறிவி:

தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில் எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன் : பாவசங்கீர்த்தனம் செய்து,  திவ்ய நற்கருணை உட்கொண்டு,  53 மணி ஜெபமாலை சொல்லி,  தேவ இரகசியங்களைத் தியானித்தபடி கால் மணி நேரம் என்னுடன் செலவிடுபவர்களுக்கு அவர்களுடைய மரண சமயத்தில், ஈடேற்றத்திற்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும்  தந்து உதவி செய்வேன் என நான் வாக்களிக்கிறேன்” என்று கூறினார்கள்.  நம் தாயின் கனிந்த அன்பை இதில் காணாதவர்கள் யார்?

இவ்வாறு செபத்தாலும், பரித்தியாகங்களாலும், மாசற்ற இருதயத்துக்கு முழுவதுமாக நம்மை அர்ப்பணித்துக் கொள்வதாலும், முதல் சனி பக்தியை அனுசரிப்பதாலும், ஜெபமாலையை அனுதினமும் சொல்வதாலும் அனுசரிக்கப்படுவதே மரியாயின் மாசற்ற இருதய பக்தியாகும். இதை சகோதரி லூஸியா “பரிகார பக்தி”என்றே குறிப்பிடுகிறாள். ஆகவே மாதாவின் மாசற்ற இருதய பக்தி என்பதே மாசற்ற இருதய பரிகாரப் பக்திதான்.

துயி பட்டணத்தில் லூஸியாவுக்கு  தமதிரித்துவக் காட்சி

லூஸியா கூறுகிறாள்: “எங்கள் மடத்தின் சிற்றாலயத்தில் சங். கொன்சால்வெஸ் சுவாமி அடிக்கடி பாவசங்கீர்த்தனம் கேட்க வருவார்... இச்சமயத்தில்தான் ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு (பாப்பரசர் ஐக்கிய அர்ப்பணமாய்) ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பதையும், அந்நாட்டை நமதாண்டவர் மனந்திருப்ப  வாக்களித்திருப்பதைப் பற்றியும் பரிசுத்த திருச்சபைக்கு நான் அறிவிக்க வேண்டும் என அவர் விரும்பும் தருணம் வந்துவிட்டதாகவும் சேசு என்னிடம் தெரிவித்தார்.

வியாழக்கிழமைகளில் இரவு 11 முதல் 12 மணி வரை திருமணி ஆராதனை செய்ய என் ஞான அதிகாரிகளிடம் நான் உத்தரவு கேட்டுப் பெற்றிருந்தேன்.  ஒரு நாள் அப்படி நான் தனியே இருக்கையில், கோவில் நடுவிலிருக்கும் கிராதியின் மத்தியில் சம்மனசின் செபத்தை சாஷ்டாங்கமாக செபிப்பதற்காக முழந்தாளிட்டேன். களைப்பாக இருந்ததால் எழுந்து கைகளை விரித்தபடி அச்செபத்தைச் சொன்னேன். அங்கிருந்த ஒரே வெளிச்சம் வாடா விளக்குத்தான். 

அப்போது திடீரென கோவில் முழுவதும் பரலோக வெளிச்சம் போல் பிரகாசமாயிற்று. பீடத்தின் மீது ஒளியால் ஆன ஒரு சிலுவை காணப்பட்டது.  அது மேற்கூரை வரையிலும் உயர்ந்து நின்றது.  மிகத் தெளிவான இந்த வெளிச்சத்தில் சிலுவையின் மேல் பாகத்தில் ஒரு மனிதனின் உருவம் இடுப்பு முதல் சிரசு வரையிலும் காணப்பட்டது.  அம்மனிதனின் மார்பில் ஒளிவீசும் ஓர் புறா இருந்தது. சிலுவையில் அறையப்பட்டவராக இன்னொரு மனிதன் காணப்பட்டார். அவரது விலாவின் சற்றுக் கீழ் ஒரு பூசைப் பாத்திரமும் அதன்மேல் ஒரு பெரிய ஓஸ்தியும் ஆகாயத்தில் நிற்பதாகத் தெரிந்தது.  

சிலுவையில் அறையப்பட்டவருடைய கன்னங்களிலிருந்து வழிந்த சில இரத்தத்துளிகளும் அவர் மார்பின் காயத்திலிருந்து பாய்ந்த இரத்தமும் அந்த ஓஸ்தியில் பட்டு, பின் பாத்திரத்துள் விழுந்தன. சிலுவையின் வலது கரத்தினடியில் மாதா நின்றார்கள். அது பாத்திமா மாதாதான். தன் மாசற்ற இருதயத்தை இடது கரத்தில் வைத்திருந்தார்கள். அதில் வாளோ ரோஜா மலர்களோ இல்லை. முள்ளாலான முடியும் சுவாலையும் இருந்தன.

சிலுவையின் இடது கரத்தினடியில் படிகத் தண்ணீர் பெரிய எழுத்துக்களாகப் பாய்ந்து “வரப்பிரசாதம்”, “இரக்கம்” என்ற வார்த்தைகளாக உருவெடுத்தது. மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் பரம இரகசியம் எனக்குக் காண்பிக்கப்பட்டதாக நான் கண்டுபிடித்தேன்.  அதைப் பற்றிய விளக்கத்தை நான் பெற்றுக் கொண்டேன். அதை வெளியிட எனக்கு உத்தரவில்லை.” 

இது எப்படிப்பட்ட காட்சி!  சத்திய கத்தோலிக்க வேதமே கட்டப்பட்டிருக்கிற பரிசுத்த தமதிரித்துவ சத்தியத்தை அதன் பொருளுடன் தத்ரூபமாக ஒரு மானிட ஆன்மா பெற்றுக் கொண்டுள்ளது!  சொல்லப் போனால் உண்மையும் சத்தியமும் மெய்யும் எதார்த்தமான இருத்தல் என்பதெல்லாமாயிருக்கிற தேவாதி தேவனாகிய சர்வேசுரனையே இக்காட்சி வெளிப் படுத்துகிறதே! இவ்வரிய காட்சியைக் காண்பித்த இந்த மகா பூஜிதமான, மிகுந்த பரிசுத்தமான சமயத்தில் கீழ்வரும் செய்தி கொடுக்கப்படுகிறது.

கடவுள் இக்கடைசி காலங்களுக்கென நமக்களிக்கிற பாத்திமா செய்தி மிகச் சுருக்கமாய் இங்கே கூறப்பட்டுள்ளது. இதிலே வரும் ஜெபங்களையும் மாதாவின் வார்த்தைகளையும் சேசுவின் வாக்கியங்களையும் மாதா அப்போஸ்தலர்களும் பிள்ளைகளும் மிகக் கவனமாய் ஆழ்ந்து சிந்தித்து ஜெபிக்க வேண்டும். அப்போது அவற்றின் உண்மையான பொருள் விளங்கும். ஆன்மா நிறைவடையும். மனதில் ஊக்கம் பிறக்கும். மாதாவுக்காக எதையும் செய்யக் கூடிய ஆவல் எழும். அதுவே இந்நூலின் பயனாக இருக்கும்.
மரியாயே வாழ்க!